மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது மல்லை சத்யா குறித்துப் பேசிய வைகோ, “பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல் எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார். 

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யாவும் ஊடகங்களின் வாயிலாகப் பதிலளித்திருந்தார். மேலும் வைகோ மற்றும் துரை வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவகாரம் தொடர்பாகவும், கடந்த 32 ஆண்டுக் கால பொது வாழ்க்கை தொடர்பாகவும் நீதி கேட்டு மல்லை சத்யா ஆகஸ்ட் 2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருந்தார். இந்நிலையில் கலைஞர் நினைவு தினத்தில் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மல்லை சத்யா தனது  ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசுகையில், “மதிமுக நிச்சயமாக தலைவருடைய (வைகோ) கட்டுப்பாட்டில் இல்லை. அவ்வாறு கட்சி கட்டுப்பாட்டில் இருக்குமேனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளரை நீக்குவதற்கான அதிகாரம் யார் கொடுத்தது?. என் மீது ஒரு அபாண்டமான துரோகப் பழியை தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா  துரோகம் செய்தது போன்று மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்தார் என்று சொல்வதற்கான அந்த மனச்சான்று எங்கிருந்து வந்தது?. இதயத்தை கீழே இறக்கி வைத்து விட்டுதான் இது போன்ற ஒரு அபாண்டமான பழிச்சொல்லை நீங்கள் (வைகோ) சொல்லி இருக்கின்றீர்கள். கட்சி உங்கள் (வைகோ) கட்டுப்பாட்டில் இல்லை என்பது இதன் மூலமாக தெரிகிறது.

உங்களுடைய (வைகோ) விருப்பம் திமுக கூட்டணியில் நீங்கள் (வைகோ)  கொடுத்திருக்கின்ற உறுதிமொழி கலைஞரை சந்தித்தபோது காலமெல்லாம் உங்களுக்கு துணை இருப்பேன். அவ்வாறு இருந்ததை போன்று தலைவர் தளபதிக்கும் (முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும்) இருப்பேன் என்று சொன்ன உத்தரவாதம் உண்மையாகுமேயானால், பாஜாகாவுடன் கையெழுத்து பெற்றது தவறு என்று ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?. எனவே உங்களுக்கு (வைகோ)  திமுக கூட்டனில் இருக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கலாம். ஆனால் துரை வைகோவுக்கு மத்திய அமைச்சராக வேண்டும் என்ற விருப்பம் இருக்கின்ற காரணத்தினால் தான் பாஜகவுடன் இந்த நெருக்கத்தை அந்த கடிதத்தில் கையெழுத்து பெற்றிருக்கிறார் என்பது வெட்கக்க கேடு. வேதனைக்குரிய ஒன்று இது தமிழக மக்கள்ஒருவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்” எனப் பேசினார்.

Advertisment

முன்னதாக துரை வைகோ கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஷ்யாவில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் உட்பட 127 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி  கோரி பாஜக கூட்டனியினர் உட்பட 15 கட்சிகளை சேர்ந்த 68 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையழுத்திட்ட கடிதத்தை பிரதமர் மோடியை சந்தித்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.