கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகள் கிருத்திகா (வயது 25), பல் மருத்துவம் படித்தவர். கடந்த ஒன்றரை மாதங்களாக ஓசூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனையை 38 வயதான மருத்துவர் அன்புச்செல்வன் என்பவர் நடத்தி வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
கிருத்திகா பணியில் சேர்ந்த 20 நாட்களுக்குப் பிறகு, அன்புச்செல்வன் அவரிடம், என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டிருக்கிறார். ஆனால், கிருத்திகா அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதன்பிறகு, அன்புச்செல்வன் எந்தத் தொந்தரவும் செய்யாமல் இருந்ததால், கிருத்திகாவும் தொடர்ந்து வேலைக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஜூலை 5) அன்று, மருத்துவர் அன்புச்செல்வன், கிருத்திகாவை இரு சக்கர வாகனத்தில் ஓசூர் பத்தலப்பள்ளி பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு மீண்டும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டிருக்கிறார். கிருத்திகா மறுப்பு தெரிவித்தபோதும், அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில், கிருத்திகா திட்டவட்டமாக மறுத்து மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அன்புச்செல்வன், நடு ரோடு என்றுக்கூட பார்க்காமல் கிருத்திகாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
பின்னர், கிருத்திகாவை மீண்டும் தனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மருத்துவமனையில் வைத்து மீண்டும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், “ஏன் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை? வேறு யாரையாவது காதலிக்கிறாயா?” என்று கேட்டு மீண்டும் தாக்கியிருக்கிறார். இதனைப் பார்த்த சக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, கிருத்திகாவின் செல்போன் அழைப்பை அவர் எடுக்காததால், சந்தேகமடைந்த அவரது தாயார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போதுதான் மருத்துவர் அன்புச்செல்வனால் தனது மகளுக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கிருத்திகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த கிருத்திகாவின் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஓசூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் மருத்துவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆண் மருத்துவர் சரமாரியாகத் தாக்கிய செயல் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.