கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரள அரசு, சட்டமன்றத்தில் மொழி சம்பந்தமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மாநிலத்தில் மலையாள மொழியைக் கட்டாயமாக்கும், இந்த மசோதாவை நிறைவேற்றிய கேரள சட்டமன்றம், ஒப்புதல் பெறவேண்டி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதா கேரளத்தில் மலையாள மொழியைக் கட்டாய மொழியாக இருப்பதை உறுதி செய்கிறது. அதன்படி, கேரளத்தில் கல்வி, வணிகம் மற்றும் அலுவல் மொழியாக மலையாளம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்த மசோதாவால் தங்களின் மொழி உரிமை பாதிக்கப்படும் என எல்லையோர பகுதிகளில் வாழும் கன்னடம் உள்ளிட்ட பிற மொழியாளர்கள், இந்த மசோதாவை எதிர்த்தனர். குறிப்பாக காசர்கோட் பகுதியில் வாழும் கன்னட மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள், இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் நீட்சியாக, அப்பகுதியைச் சேர்ந்த சில கன்னட அமைப்புகள், இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, இந்த மசோதா குறித்து கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில், ‘மலையாள மொழி மசோதா - 2025’ எனும் இந்த மசோதாவிற்குக் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் நேற்று (04-03-26) ஒப்புதல் வழங்கினார். இதனால், மலையாள மொழி இப்போது முதல், மாநிலத்தில் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை மலையாளம் கட்டாய மொழி படமாக இருக்கும். அதோடு, மாவட்ட நீதிமன்றங்கள் முதல் கீழ் நிலை நீதிமன்றங்கள் வரை தீர்ப்புகளும் மலையாளத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவால், எல்லையோரத்தில் வாழும் பிற மொழி பேசும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், “மொழியியல் சிறுபான்மையினர்களின், குறிப்பாகத் தமிழ் மற்றும் கன்னடம் பேசும் மக்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் இந்த சட்டப்பிரிவுகள் அமைந்துள்ளது. எனவே, தமிழ் மற்றும் கன்னடம் பேசும் மக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டாம்” என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த மலையாள மொழி சட்ட மசோதா, கடந்த 2015 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இந்த மசோதாவிற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us