திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாநகராட்சியில், அனைத்திந்திய அதிமுக ஆட்சியில் MCC எனப்படும் 25 நுண் உரமாக்கல் மையங்கள் மற்றும் 3 உலர் கழிவு மீட்பு மையங்கள் நிறுவப்பட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் குப்பைகள் முறையாக தரம் பிரித்து செயல்பட்டுக் கொண்டிருந்த மையங்களை முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

தற்போது ஒவ்வொரு வார்டிலும் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றாமல், 'டாலர் சிட்டி' என்ற பெயர் மாறி 'குப்பை நகரம்' என்ற நகரமாக மாற்றி, சுகாதார சீர்கேட்டின் காரணமாக நோய்த் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் முன்தேதியிட்டு, குப்பை வரியை 150 சதவீதம் உயர்த்தியதோடு, குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீட்டு உரிமையாளர்களுக்கு ஐம்பது ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் பகிரங்கமாக மிரட்டும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  

Advertisment

அதிமுக ஆட்சியில் சுமார் 1,064 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டு செயல்படுத்தப்பட்ட திருப்பூர் 4-ஆவது கூட்டுக் குடிநீர் (மேட்டுப்பாளையம் குடிநீர்) திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கியதன் காரணமாக, மாநகர மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காத அவல நிலையை ஏற்படுத்தி உள்ள திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். திருப்பூர் 4-ஆவது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால், இருசக்கர வாகனத்தில் பயணிப்போர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அடிக்கடி வாகன விபத்தில் சிக்கும் அபாய நிலையை ஏற்படுத்தி உள்ள திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் திமுக. வைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் திமுக-நிர்வாகிகள் என அனைவரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை (BLO) மிரட்டுகின்றனர். அதோடு, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்டும் காணாமலும் இருந்து வரும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் வரும் 25 ஆம் தேதி  (25.11.2025 - செவ்வாய்க் கிழமை) காலை 10.30 மணியளவில், திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment