மேற்கு வங்க மாநிலம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நட்சத்திரப் பேச்சாளருமான மஹுவா மொய்த்ரா, தொடர்ந்து பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். நாடாளுமன்றத்தில் இவருடைய பேச்சு பலரால் ரசிக்கப்பட்டாலும், சில நேரங்களில் சர்ச்சைக்குள் சிக்கி வருகிறார். இவர், கடந்த மே மாதம் பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை இரண்டாவது திருமணமாக கரம் பிடித்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் தீபாவளியைக் கொண்டாடும் இந்தியர்களுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவை ஆதரித்ததாகக் கூறி எம்.பி மஹுவா மொய்த்ரா தற்போது சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாகவும் கோலகலமாகவும் கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் தாங்கள் வாழும் நாட்டிலேயே தீபாவளி பண்டிகையை கோலகலமாகக் கொண்டாடினர்.
வெளிநாட்டில் இந்தியர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு நிறைய குப்பைகள் இருப்பது போன்ற வீடியோவை ஒரு நபர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‘இது போல் மூளைச்சாவு அடைந்த இந்தியர்களை அவர்களது தீபாவளி குப்பைகளால், நமது அழகிய மேற்கத்திய நாடுகளை முழுமையான குப்பை மேடுகளாக மாற்ற அனுமதித்துள்ளோம்’எனப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு எம்.பி மஹுவா மொய்த்ரா, ‘நான் ஒப்புக்கொள்கிறேன்’ எனப் பதிலளித்தார்.
மஹுவா மொய்த்ராவின் இந்த ஒப்புதல் பதில் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. மஹுவா மொய்த்ரா இந்தியா மீது எதிர்ப்பையும் இந்து மக்கள் மீது எதிர்ப்பையும் கொண்டுள்ளார் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக மேற்கு வங்க பா.ஜ.க தலைமை தனது எக்ஸ் பக்கத்தில், ‘வங்காளதேசம் இந்தியாவை விட சிறந்தது என்று நம்பும் மஹுவா மொய்த்ரா, ஆடம்பர கைப்பைகளுக்கு ஈடாக தேசிய பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் அவர்களின் ஆட்சியின் கீழ், தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கத் துணியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக சொல்லொணா அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன. பல இடங்களில், இந்துக்கள் காளி பூஜை செய்ததால் காளி கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் காளி தேவியை இறைச்சி மற்றும் மதுவின் தெய்வம் என்று வர்ணித்த அதே மஹுவா மொய்த்ரா தான்’ எனத் தெரிவித்தது.
பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட மஹுவா மொய்த்ரா, எக்ஸ் பதிவு குறித்து இன்று விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு வீடியோக்களை காட்டுகிறது. இனவெறி கொண்ட ஒரு வீடியோவிற்குக் கீழே உள்ள ஒரு வீடியோவை ‘நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்று சொல்ல வந்தேன். என் தவறு தான். பயணம் செய்து கொண்டிருந்ததால் சரியாக பார்க்கவில்லை. மன்னிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/24/mahua-2025-10-24-17-56-55.jpg)