மேற்கு வங்க மாநலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. TMC-யின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா தொடர்ந்து பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்து வருகிறார். மக்களவையில் தனது தனித்துவமான மற்றும் தைரியமான பேச்சால் பலரது கவனத்தையும் பெற்றவர். நாடாளுமன்றத்தில் அவர் பேசும் ஒவ்வொரு கருத்தும் தேசிய அளவில் உற்றுநோக்கப்படுகிறது. அதே சமயம், அவரது பேச்சுக்களும் கருத்துகளும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் தற்போது, மஹுவா மொய்த்ராவின் கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 20 ஆம் தேதி இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் தாங்கள் வாழும் நாட்டிலேயே தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினர். இந்த நிலையில், கனடாவைச் சேர்ந்த யூடியூபர் நேட் என்பவர், வெளிநாட்டில் இந்தியர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு நிறைய குப்பைகள் இருப்பது போன்ற வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘இது போல் மூளைச்சாவு அடைந்த இந்தியர்கள் அவர்களது தீபாவளி குப்பைகளால், நமது அழகிய மேற்கத்திய நாடுகளை முழுமையான குப்பை மேடுகளாக மாற்ற அனுமதித்துள்ளோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த இனவெறி பதிவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, “நான் அதை ஒப்புக்கொள்கிறேன்” என்று கருத்து தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், தேசிய அளவில் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. மஹுவா மொய்த்ரா இந்தியா மீது எதிர்ப்பையும், இந்து மக்கள் மீது வெறுப்பையும் கொண்டுள்ளார் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
குறிப்பாக மேற்கு வங்க பா.ஜ.க தலைமை, ‘வங்காளதேசம் இந்தியாவை விட சிறந்தது என்று நம்பும் மஹுவா மொய்த்ரா, ஆடம்பர கைப்பைகளுக்கு ஈடாக தேசிய பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் அவர்களின் ஆட்சியின் கீழ், தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கத் துணியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன. பல இடங்களில், இந்துக்கள் காளி பூஜை செய்ததால் காளி கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் காளி தேவியை இறைச்சி மற்றும் மதுவின் தெய்வம் என்று வர்ணித்தது இதே மஹுவா மொய்த்ரா தான்’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மஹுவா மொய்த்ரா, தனது செயலுக்கு விளக்கமளித்து மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது எக்ஸ் பக்கத்தில் பல்வேறு வீடியோக்கள் காட்டப்பட்டன. இனவெறிக் கருத்துகள் கொண்ட அந்தப் வீடியோவிற்குக் கீழே இருந்த மற்றொரு வீடியோவில் உள்ள கருத்தைதான் ‘நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்று கூற வந்தேன். தற்போது வரை கவனிக்காமல் இருந்துவிட்டேன். இது என் தவறு தான். பயணம் செய்து கொண்டிருந்ததால் சரியாகப் பார்க்கவில்லை. மன்னிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இதனை ஏற்றுக்கொள்ளாத பா.ஜ.கவினர் தொடர்ந்து மஹுவா மொய்த்ராவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow Us