மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாயுதி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மகாயுதி கூட்டணிக்குள் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டாலும், கூட்டணியை கைவிடாமல் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இம்மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கூட்டணி எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தரமற்ற உணவு கொடுத்ததால் கேண்டீன் ஊழியரை  சிவசேனா கட்சி எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் என்பவர் கடுமையாக தாக்கி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ சஞ்சய் ஷிர்சாத் வீட்டில் பணப்பையுடன் இருந்து சர்ச்சையில் சிக்கினார். இந்த இரண்டு நிகழ்வுகளும் அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தேவேந்திர பட்னாவிஸுக்கு நெருக்கடியை கொடுத்தது.

அதன் பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மாணிக்ராவ் கோகடே என்பவர் மாநில சட்டமன்றத்தில் தனது மொபைல் போனில் ரம்மி விளையாடுவது போன்ற வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், மகாராஷ்டிரா அரசாங்கம் ஒரு பிச்சைக்கார அரசாங்கம் என மாணிக்ராவ் கோகடே பேசி சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை ஏற்படுத்தினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர், பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசை, பிச்சைக்கார அரசாங்கம் என்று பேசியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனால் கூட்டணி கட்சிகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்குள் மேலும் பிளவு ஏற்படுத்தும் வகையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த சமூக நீதி அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் - பா.ஜ.க இணை அமைச்சர் மாதுரி மிசல் ஆகியோர் இடையே துறை ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜ.க இணை அமைச்சரான மாதுரி மிசல், அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத்திடம் கலந்து ஆலோசிக்காமல் எம்.எல்.ஏக்கள் கூட்டங்களைக் கூட்டி அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சஞ்சய் ஷிர்சாத் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு, மாதுரி மிசல் தனது ஒப்புதல் இல்லாமல் மறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் எதிர்காலத்தில் நடக்கும் அனைத்துக் கூட்டங்களும் தனது தலைமையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். 

Advertisment

அந்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய மாதுரி மிசல், ‘150 நாட்களுக்குள் அரசுப் பணிகளை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வரின் உத்தரவின்படி எனது கடமைகளும் எனது பொறுப்புகளும் உள்ளன. இந்தக் கூட்டங்களின் போது எந்த அதிகாரப்பூர்வ முடிவுகளும் எடுக்கப்படவில்லை, பரிந்துரைகள் மட்டுமே வழங்கப்பட்டன. சமூக நீதித்துறை இணை அமைச்சராக, துறையின் மறுஆய்வுக் கூட்டங்களை நடத்த எனக்கு அதிகாரம் உள்ளது. இந்தக் கூட்டங்களை நடத்துவதற்கு உங்கள் முன்அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை’ என்று தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையேயான வார்த்தை மோதலால், கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இதனிடையே, மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதற்கு அமைச்சரின் ஒப்புதல் தேவையா என்பது குறித்து தெளிவுப்படுத்தக் கோரி மாதுரி மிசல் தற்போது முதல்வர் அலுவலகத்தை அணுகியுள்ளார். மாதுரி மிசலின் இந்த கருத்துக்களால் பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தலைவர்களுக்கு இடையே மேலும் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.