சென்னையை அடுத்துள்ள புழல் அருகே அமைந்துள்ள காவாங்கரை திருநீலகண்ட நகர் மகாவீர் கார்டன் பிரதான சாலையில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறார். இத்தகைய சூழலில் தான் இன்று (30.01.2026) காலை சுமார் 06:30 மணி அளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இவர் வீட்டின் பின்புறமாக உள்ள சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்து வீட்டின் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜயகுமாரின் மனைவி வசந்தா, வீட்டின் கதவைத் திறக்க முயன்றுள்ளார்.
அப்போது, மர்மநபர்கள் அவரை மடக்கிப் பிடித்து கை மற்றும் கால்களைக் கட்டி போட்டுவிட்டு உள்ளே சென்றுள்ளனர். அதோடு விஜயகுமாரின் மகள் மற்றும் மற்ற இருவரையும் கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் இருந்த 25 லட்சம் ரூபாய் மற்றும் 15 சவரன் தங்க நகையையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து காலை 9 மணி அளவில் புழல் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து புழல் குற்றப்பிரிவு காவல் துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மற்றொருபுறம் சம்பவம் நடந்த வீட்டில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா இல்லாதது விசாரணையில் தெரிய வந்துள்ளது. “விரைவாகக் குற்றவாளிகளைப் பிடிப்போம்” என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த 4 பேரை கட்டிப் போட்டு விட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us