இந்தியாவில் வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், குறைந்த கட்டணம் மூலமாகவும் செல்கின்றனர். அதில் ரேபிடோ போன்ற செயலி மூலமாக முன்பதிவு செய்து பைக்கில் பயணிக்கும் பயணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். வெளிப்படைத் தன்மை இல்லாததால், இந்தியாவை பொறுத்தவரை பைக் டாக்சி சேவைகளுக்கான அனுமதி மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. குறிப்பாக, கோவா, தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பைக் டாக்சிக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பைக் டாக்சிக்கு தடை அல்லது தெளிவற்ற ஒழுங்குமுறைகள் உள்ளன.

சமீபத்தில் கர்நாடகாவில் பைக் டாக்சி சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு அதற்கு தடை விதிக்கப்பட்டது. கர்நாடகாவை போலவே, அதிக மக்கள் நடமாடும் மாநிலமான மகாராஷ்டிராவிலும் பைக் டாக்சிக்கு தடை ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு மகாராஷ்டிரா அரசு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பைக் டாக்சிக்கு அனுமதி அளித்தது. ஆனால், ஆப் மூலம் இயங்கும் பைக் டாக்சி நிறுவனங்கள்,1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சேவைகளை இயக்க வேண்டும், குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு இணங்கும் நிறுவனங்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்ற உள்ளிட்ட பல விதிகளை உருவாக்கியது. ஆனால், தற்போது வரை இந்த விதிகள் முறையாக அறிவிக்கப்படாததால், பைக் டாக்சிகள் இயக்குவதற்கு மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக கருதப்படுகிறது.

இருப்பினும், மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக பைக் டாக்சி இயங்கி வருவதாகக் கூறப்பட்டது. இது குறித்து மகாராஷ்டிரா போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக், மூத்த அதிகாரி ஒருவரிடம் விசாரித்துள்ளார். அதற்கு அவர், ‘மும்பையில் சட்டவிரோத பைக் டாக்சிகள் இயங்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் இதை அப்படியே விட்டுவிடாமல், அதிகாரியின் கூற்றை பிரதாப் சர்நாயக் சோதிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி வேறு ஒரு பெயரைப் பயன்படுத்தி ரேபிடோ செயலி மூலம் மந்திராலயத்தில் இருந்து தாதர் என்ற பகுதிக்கு பயணத்தை முன்பதிவு செய்தார். அடுத்த 10 நிமிடங்களில், அவரை அழைத்துச் செல்ல பைக் டாக்சி அங்கு வந்தது. பிக்கப் செய்ய வந்த பைக் ஓட்டுநரிடம், போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப், “மும்பையில் பைக் டாக்சிகள் சட்டவிரோதமானவை. நான் போக்குவரத்து அமைச்சர். இந்த விதிகள் உங்கள் நலனுக்காகவே இருக்கிறது” என்று கூறினார்.

இதனைக் கேட்ட ஆச்சரியமடைந்த ஓட்டுநரிடம், “நீங்க இங்க வந்துவிட்டீர்கள், அதற்கு நான் ரூ.500 தருகிறேன்” என்று ரூ.500 பணத்தை வழங்கினார். ஆனால், அந்த ஓட்டுநர் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அதே நேரம் ஓட்டுநர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கூறிய அமைச்சர் பிரதாப், “உங்களைப் போன்ற ஏழை நபர் மீது வழக்குப் பதிவு செய்வதன் மூலம் நாங்கள் எதையும் பெறப்போவதில்லை. ஆனால், சட்டவிரோத நடவடிக்கைக்குப் பின்னால் இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது தான் எங்கள் நோக்கம்” என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.