மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி மேற்கு பகுதியில் பல அடுக்கு மாடிகளைக் கொண்ட ஜே.எம்.எஸ். வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வணிக வளாகத்தில் யாரும் எதிர்பாரதவிதமாக திடீரென இன்று (23.10.2025) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் மேல்தளத்தில் சிக்கிய இருவரை, ராட்சத கிரேன் உதவியோடு தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.