கொலை முயற்சி வழக்கில் 48 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 71 வயது முதியவரை மும்பை போலீஸ் கைது செய்திருப்பது வியத்தகு சம்பவமாக அமைந்துள்ளது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மதுகர் கலேகர் என்ற 23 வயது நபர், தனது காதலி துரோகம் செய்ததாக சந்தேகித்து கடந்த 1977ஆம் ஆண்டு அவரை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுகர் கலேகரை கொலாபா காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். பல ஆண்டுகளாக அவருக்கு எதிராக பல வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனாலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகததால் அவர் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 

Advertisment

48 ஆண்டுகளாக மதுகர் கலேகர் தலைமறைவாக இருந்த நிலையில், 6 மாதத்திற்கு முன்பு கொலாபா போலீசார் அந்த வழக்கை மீண்டும் திறந்து அவரை தீவிரமாகத் தேடத் தொடங்கினர். போலீசார், அவர் கடையாக அறியப்பட்ட முகவரிக்குச் சென்று விசாரிக்கத் தொடங்கினர். மும்பையின் பல்வேறு பகுதிகளை தேடினர், வாக்காளர் பட்டியல்களைச் சரிபார்த்தனர். பொது பதிவுகளை பார்த்தனர். ஆனால், அவரது பெயர் எங்கும் காணப்படவில்லை. எனவே, அடுத்தகட்ட நகர்வாக நீதிமன்ற பதிவுகள் மற்றும் போக்குவரத்துத் துறை தரவுத்தளங்களை போலீசார் சரிபார்க்கத் தொடங்கினர். அப்போது, சாலை மோதல் சம்பவத்தில் ஒருவரை காயப்படுத்தியதற்காக டபோலி காவல் நிலையத்தில் 2015ஆம் ஆண்டு மதுகர் கலேகர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் கலேகர் இன்னும் வசித்து வருகிறாரா என்பதை கண்டறிய ஒரு போலீஸ் குழு கடந்த 13ஆம் தேதி இரவு அந்த இடத்தைப் பார்வையிட்டனர். அப்போது ஆச்சரியம் கொடுக்கும் வகையில், அந்த இடத்தில் மதுகர் கலேகர் இருப்பதைக் போலீசார் கண்டுபிடித்தனர். 48 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வீட்டு வாசலில் போலீசார் இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். கிட்டத்தட்ட கொலை முயற்சி வழக்கைப் பற்றி மதுகர் மறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில், கலேகர் 23 வயது இளைஞராக இருந்தார். இப்போது 71 வயது, அவரது தோற்றம் கணிசமாக மாறியிருந்தது.

Advertisment

அதனை தொடர்ந்து, மதுகர் கலேகரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.