மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் மும்பையில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவர் மராத்தி மொழி பேச தெரியாது என்று சொன்னதால், நவநிர்மாண் சேனா கட்சியினர் அவரின் கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினர். அதே போல், வங்கி பணப்பரிவர்த்தனைகளில் மராத்தி மொழி பயன்படுத்தாததால் வங்கி ஊழியர் ஒருவர் மீது, நவநிர்மண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு தொடர்ந்து மொழி தொடர்பான சர்ச்சை நிகழ்ந்து வருகிறது.

மொழி தொடர்பான சர்ச்சை அம்மாநிலத்தில் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், மராத்தி பேசாததால் இனிப்புக் கடைக்காரர் ஒருவரை நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 28ஆம் தேதி மாலை மீரா சாலையில் அமைந்திருக்கும் ஒரு இனிப்பு கடைக்குள் நவநிர்மாண் சேனா கட்சியினர் என அடையாளம் காணப்பட்ட மூன்று பேர் நுழைந்தனர். அப்போது மராத்தி பேசுமாறு கட்சியினர் கூறியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அந்த கடைக்காரர், ‘மராத்தி கட்டாயமானது என்று எனக்குத் தெரியாது. யாராவது எனக்குக் கற்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவநிர்மாண் சேனா கட்சியினர், கடைக்காரரை கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்தன. இது தொடர்பாக தாக்குதல் நடத்திய நவநிர்மாண் சேனா கட்சியினர் மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அப்பாவி இந்துக்களை நவநிர்மாண் சேனா கட்சியினர் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக பா.ஜ.க மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார். நவநிர்மாண் சேனா கட்சியினரால் கடைக்காரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதேஷ் ரானே, “ஒரு இந்து அறையப்பட்டிருக்கிறார். அவ்வளவு தைரியம் வந்திருக்கிறது. அப்பாவி இந்துக்கள் மீது நவநிர்மாண் சேனா கட்சியினர் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நல் பஜார் அல்லது முகமது அலி சாலை போன்ற பகுதிகளில் நீங்கள் ஏன் அதே தைரியத்தைக் காட்டக்கூடாது?. மண்டை ஓடு அணிந்திருப்பவர்களும், தாடி வைத்திருப்பவர்களும் மராத்தி பேசுகிறார்களா? அவர்கள் தூய மராத்தி பேசுகிறார்களா? அவர்களை அறைய யாருக்கும் தைரியம் இல்லை. அமிர் கான் மராத்தியில் பாடுகிறாரா? ஜாவேத் அக்தர் மராத்தியில் பேசுகிறாரா? அவர்களை மராத்தியில் பேச வைக்க யாருக்கும் தைரியம் இல்லை. பிறகு ஏன் ஒரு ஏழை இந்துவை அறைய உங்களுக்கு தைரியம் வருகிறது?. இந்த அரசாங்கம் இந்துக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது இந்துத்துவ சிந்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம். எனவே யாராவது இதுபோன்ற செயல்களைச் செய்ய துணிந்தால், எங்கள் அரசாங்கம் அதன் மூன்றாவது கண்ணைத் திறக்கும்” என்று கூறினார்.

முன்னதாக மராத்தியை அவமதித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனா தலைவருமான யோகேஷ் கடம் பேசியிருந்தார். இது குறித்து நேற்று (03-07-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய யோகேஷ் கடம், “மகாராஷ்டிராவில் நீங்கள் கண்டிப்பாக மராத்தி பேச வேண்டும். உங்களுக்கு மராத்தி தெரியவில்லை என்றால், மராத்தி பேசவே மாட்டேன் என்ற மனப்பான்மை இருக்கக் கூடாது. நாங்கள் அதை பேச முயற்சிக்கிறோம் என்று நீங்கள் கூறலாம். மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை யாராவது அவமதித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடை உரிமையாளரை அடித்தவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக்கூடாது. அவர்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக புகார் அளித்திருக்க வேண்டும், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment