இந்தி திணிப்புக்கு எதிராக தனது உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் மும்பையில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவர் மராத்தி மொழி பேச தெரியாது என்று சொன்னதால், நவநிர்மாண் சேனா கட்சியினர் அவரின் கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினர். அதே போல், வங்கி பணப்பரிவர்த்தனைகளில் மராத்தி மொழி பயன்படுத்தாததால் வங்கி ஊழியர் ஒருவர் மீது, நவநிர்மண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு தொடர்ந்து மொழி தொடர்பான சர்ச்சை நிகழ்ந்து வருகிறது. இதற்கிடையில், தேசிய கல்வி கொள்கை மூலம் வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில் அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால், அந்த முடிவில் இருந்து பின்வாங்கி இந்தி கட்டாயமாக இருப்பதற்கு விருப்பமான மூன்றாவது மொழியக இருக்கும் என்ற அறிவிப்பை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.
இந்தி மொழியை ஆதரிக்கும் தேசிய கல்வி கொள்கையில் இருந்து முதலில் பின்வாங்கிவிட்டு, அதன் பின்னர் அதே இந்தி மொழியை மறைமுகமாக மாணவர்களுக்கு திணிப்பதாக கூறி மராத்தி அமைப்புகள் உள்பட எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால், மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்படாது என்று கூறி தனது இரண்டு முடிவுகளிலும் இருந்து மகாராஷ்டிரா அரசு பின்வாங்கியது.
மொழி தொடர்பான சர்ச்சை அம்மாநிலத்தில் ஏற்பட்டு சூழ்நிலையில், மராத்தி பேசாததால் இனிப்புக் கடைக்காரர் ஒருவரை நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 28ஆம் தேதி மாலை மீரா சாலையில் அமைந்திருக்கும் ஒரு இனிப்பு கடைக்குள் நவநிர்மாண் சேனா கட்சியினர் என அடையாளம் காணப்பட்ட மூன்று பேர் நுழைந்தனர். அப்போது மராத்தி பேசுமாறு கட்சியினர் கூறியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அந்த கடைக்காரர், ‘மராத்தி கட்டாயமானது என்று எனக்குத் தெரியாது. யாராவது எனக்குக் கற்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவநிர்மாண் சேனா கட்சியினர், கடைக்காரரை கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக கட்சியினர் மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மராத்தி பேச மறுத்ததால் கடைக்காரர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனா தலைவருமான யோகேஷ் கடம் பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இன்று (03-07-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய யோகேஷ் கடம், “மகாராஷ்டிராவில் நீங்கள் கண்டிப்பாக மராத்தி பேச வேண்டும். உங்களுக்கு மராத்தி தெரியவில்லை என்றால், மராத்தி பேசவே மாட்டேன் என்ற மனப்பான்மை இருக்கக் கூடாது. நாங்கள் அதை பேச முயற்சிக்கிறோம் என்று நீங்கள் கூறலாம். மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை யாராவது அவமதித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடை உரிமையாளரை அடித்தவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக்கூடாது. அவர்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக புகார் அளித்திருக்க வேண்டும், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்” என்று கூறினார்.