மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

இம்மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தரமற்ற உணவு கொடுத்ததால் கேண்டீன் ஊழியரை  சிவசேனா கட்சி எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் என்பவர் கடுமையாக தாக்கி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ சஞ்சய் ஷிர்சாத் வீட்டில் பணப்பையுடன் இருந்து சர்ச்சையில் சிக்கினார். இந்த இரண்டு நிகழ்வுகளும் அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மாணிக்ராவ் கோகடே என்பவர் மாநில சட்டமன்றத்தில் தனது மொபைல் போனில் ரம்மி விளையாடுவது போன்ற வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவை சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் பவார் பகிர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாணிக்ராவ் கோகடேவை கடுமையாக விமர்சித்திருந்தனர். இது குறித்து மாணிக் கோகடே கூறியதாவது, “ஆன்லைன் ரம்மி எப்படி விளையாடுவது என்று எனக்கு தெரியாது. விளையாட்டை விளையாட ஒருவருக்கு ஓடிபி தேவை, மேலும் ஒரு வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும். எனது மொபைல் போன் அத்தகைய விளையாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஒருவர் சரிபார்க்கலாம். எனது திரையில் 10 முதல் 15 வினாடிகள் தோன்றிய ஒரு விளையாட்டின் விளம்பரத்தை தவிர்க்க முயற்சித்தேன்’ என்று கூறினார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் , மகாராஷ்டிரா அரசாங்கம் ஒரு பிச்சைக்கார அரசாங்கம் என மாணிக்ராவ் கோகடே பேசி சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில விவசாயத்துறை அமைச்சருமான மாணிக்ராவ் கோகடே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஒரு பிச்சைக்காரர் கூட ஒரு ரூபாய் பிச்சை வாங்குவதில்லை. ஆனால் இங்கே நாம் ஒரு ரூபாய்க்கு பயிர் காப்பீடு செய்கிறோம். அப்படியிருந்தும், சிலர் அதைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அரசாங்கம், விவசாயிகளுக்கு 1 ரூபாய் கொடுக்கவில்லை, அவர்களிடமிருந்து 1 ரூபாய் வாங்குகிறது. அரசாங்கம் ஒரு பிச்சைக்கார அரசாங்கமாக இருக்கிறது. ஒரு ரூபாய் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 5 லட்சம் முதல் 5.3 லட்சம் வரை போலி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது. அவற்றை நிராகரித்து பல திருத்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர், பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசை, பிச்சைக்கார அரசாங்கம் என்று பேசியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மாணிக்ராவ் கோகடே பேசியது குறித்து மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “அவர் அத்தகைய கருத்தை தெரிவித்திருந்தால், அமைச்சர்கள் இவ்வாறு பேசுவது பொருத்தமற்றது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் அல்லாமல், காப்பீட்டு நிறுவனங்கள் பயனடைவதைக் கண்டதால், நாங்கள் சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” என்றார்.