இந்து பெண்கள் ஜிம்மிற்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஜிம்மிற்குப் பதிலாகா வீட்டியிலேயே யோகா உடற்பயிற்சி செய்துகொள்ள வேண்டும் என்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கோபிசந்த் படால்கர் என்பவர், ஜாட் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருகிறார். இவர், பீட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இந்து பெண்களுக்கு அறிவுரை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ கோபிசந்த், “ஜிம் கூடம் எல்லாம் ஒரு பெரிய மோசடி. உங்களுக்கெல்லாம் அது தெரியாது. அங்கு ஒரு பெரிய சதி நடக்கிறது, அதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். மிகவும் நல்லவர் அல்லது நன்றாகப் பேசுபவர்களால் ஏமாறாதீர்கள். இதனால் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்து பெண்களை கவர்ந்திழுக்கிறார்கள்.
ஜிம்மில் தங்கள் பயிற்சியாளர் யார் என்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் உள்ள இளம் பெண்கள் ஜிம்மிற்குச் சென்றால், அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இந்து பெண்கள் வீட்டிலேயே யோகா பயிற்சி செய்ய வேண்டும், ஜிம்மிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர்கள் உங்களை ஏமாற்றி அநீதி இழைக்கிறார்கள். அடையாள விவரங்கள் இல்லாமல் கல்லூரிகளுக்குச் செல்லும் இளைஞர்களைக் கண்டறிந்து உள்ளே நுழைவதைத் தடுக்க வேண்டும். நாம் ஒரு வலுவான தடுப்பை உருவாக்க வேண்டும்” என்று கூறினார். பா.ஜ.க எம்.எல்.ஏ கோபிசந்த் படால்கரின் இந்த பேச்சு அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் சுதந்திரத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கிறார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.