மதுரை அண்ணாநகர் அருகே உள்ள யாகாப்பா நகர் பிரதான சாலையில் சக்தி மாரியம்மன் கோவில் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் முன்னாள் கவுன்சிலர் சுசீந்திரன் என்பவரின் பழமையான வீடு ஒன்று இருந்து வந்தது. மிகவும் பழமையான இந்த வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை. இத்தகைய சூழலில்தான் தான் மதுரையில் கடந்த இரு தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. அந்த வகையில் சுசீந்திரனின் பழமையான வீட்டின் அருகிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வந்த மூதாட்டி ஜமீதா (வயது 60) இன்று (04.10.2025) மாலை 5 மணியளவில் பொருள் வாங்குவதற்காக வெளியே வந்துள்ளார். அப்பொழுது இந்த பழமையான வீடு திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதே சமயம் இந்த இடிபாடுகளில் சிக்கிய 9 வயதுடைய ஆண் குழந்தை, 5 வயதுடைய பெண் குழந்தை என இரு குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் சிலர் இந்த இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்றொரு புறம் அண்ணாநகர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பழமையான வீடு இடிந்து விபத்திற்குள்ளானதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மதுரை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.