மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே மண்டல த் தலைவர்கள் 5 பேர், 2 நிலைக்குழு தலைவர்கள் உள்ளிட்ட 29 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். மற்றொரு புறம் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இத்தகைய பரபரப்பான சூழலில் மதுரை மேயராக பதவி வகித்து வந்த இந்திராணி தனது குடும்பச் சூழல் காரணமாகப் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடந்த 15ஆம் தேதி (15.10.2025) அறிவித்திருந்தார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்ததற்கு மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று (17.10.2025) ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது மதுரை மாநகராட்சியின் அவசர கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் 100 வார்டு கவுன்சிலர்களும் முழுமையாக மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனையடுத்து சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மதுரை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் திமுக தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளை கைப்பற்றியிருந்தது. இதன் மூலம் மதுரை மாநகராட்சியின் திமுக சார்பில் 8வது மேயராக இந்திராணி பொன்வசந்த் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/17/madurai-corporation-ex-mayor-2025-10-17-11-43-13.jpg)