மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தனக்கூடு கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரும் 6ஆம் தேதி (06.01.2025) சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. அதோடு அன்றைய தினம் கந்தூரி விழா நடைபெறும். இத்தகைய சூழலில் தான் மந்திரமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி விழா நடத்தக்கூடாது. அன்றைய தினம் மலை உச்சியில் ஆடு, கோழி உள்ளிட்டவற்றைப் பலியிடத் தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து தர்கா தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி அமர்வில் இன்று (02.01.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பிலும், தர்கா தரப்பிலும் வாதிடுகையில், “சிக்கந்தர் தர்காவில் நடைபெற்று வரும் சந்தனக் கூடு விழாவிற்கான அழைப்பிதழில் சந்தனக்கூடு விழாதான் நடைபெறும் என்று தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடு, கோழி பலி இடப்படாது என ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மலை உச்சியில் உள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிடப்படாது. அசைவ உணவும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவு உள்ள நிலையில் இது போன்ற வழக்குகள் தேவையற்றது.” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்த வாதங்களின் அடிப்படையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
Follow Us