சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மதுரையைச் சேர்ந்த சிவகாமி என்பவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் வயது முதிர்ந்தவர் என்பதால் கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவர் வீல் சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அஜித்திடம் சாவியைக் கொடுத்து காரை பார்க் செய்யுமாறு சிவகாமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அஜித்தும் அவர்களுடைய காரை பார்க் செய்துவிட்டு சாவியை கொடுத்துள்ளார். இதனையடுத்து சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த சிவகாமி குடும்பத்தினர் காரில் இருந்த 10 பவுன் நகையைக் காணவில்லை எனத் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இளைஞர் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக அஜித்தின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு புறம் கோவிலுக்கு அருகே உள்ள பகுதியில் கோவிலின் செயல் அலுவலகத்தில் வைத்துக் குற்றப்பிரிவு போலீசார் அஜித்குமாரை பைப்புகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் பைப்புகள் உடைந்து சிதறி கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் காரணமாகக் கோவிலைச் சுற்றியுள்ள வியாபாரிகள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாகத் தனிப்படை காவலர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி ஆசித் ராவத் உத்தரவிட்டுள்ளார். அதோடு இந்த சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து மதுரையில் நீதிபதி வேங்கடப்பிரசாத் அஜித்குமாரின் தம்பி, அக்கா மற்றும் அவரது அம்மா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடமும், உறவினர்களிடமும் விரிவான விசாரணை நடத்தினார். இதற்கிடையில், அஜித்குமார் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. நீதிபதி வேங்கடபிரசாத், அஜித்குமாரின் உடலில் இருந்த காயங்கள் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேன்டும் என உயிரிழந்த அஜித் குமார் சார்பில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு இன்று (30-06-25) முறையீடு செய்தனர். அப்போது காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, ‘கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த நபர் என்ன தீவிரவாதியா?. ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்கலாம். அவ்வாறு இன்றி, ஒரு சாதாரண சந்தேக வழக்கில் அவரை விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன் என தெரியவில்லை?. இதனை பாதிக்கப்பட்டோர் மனுவாக தாக்கல் செய்யுங்கள், விசாரணைக்கு எடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.