திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர், சென்னையில் பணிபுரியும் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரைத் தொடர்ந்து, மாயமான மகளை மீட்டுத்தரக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அமர்வு முன்பு இன்று (30-12-25) வந்தது. அந்த விசாரணையின் போது சம்பந்தப்பட்ட இளம்பெண் நீதிபதிகள் முன்பு காணொளி வாயிலாக ஆஜரானார். அந்த பெண் கூறுகையில், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தன்னுடன் பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள், “காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போன்றது, ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு. உரிய வயதை அடைந்தவர்கள் அவர்கள் விரும்பியவருடன் செல்வது என்பது தனிப்பட்ட விருப்பம். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என பெற்றோர் படிக்க வைக்கிறார்கள், காதலிக்க அல்ல.
காதலிக்கும் பிள்ளைகள், தங்களின் பெற்றோரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். விரும்பியவரை திருமணம் செய்துகொள்வது இருபாலரின் தனிப்பட்ட விருப்பம். காதலித்து திருமணம் செய்துகொள்பவர்கள், வயதான பெற்றோரை தவிக்க விடலாமா?. தற்போதைய காலகட்டத்தை புரிந்துகொண்டு அதற்கேற்றபடி பெற்றோரும் நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறி சம்பந்தப்பட்ட பெண் காதல் திருமணம் செய்துகொண்டதால் இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/30/maduraihighcourt-2025-12-30-14-05-57.jpg)