சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் பாகுபாடு காட்டுவது வேதனையளிப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டு கிடப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த கோயிலை திறந்து கிராம மக்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதே போன்று, சம்பந்தப்பட்ட கோயிலுக்குள் சாதி பாகுபாடின்றி பட்டியலின மக்களையும் அனுமதிக்க வேண்டும் என மாரிமுத்து என்பவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி புகழேந்தி முன்பு இன்று (19-07-25) வந்தது. அப்போது கரூர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கோயில் பூட்டப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நாள்தோறும் பூஜை நடத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கேட்ட நீதிபதி, ‘சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதற்காக ஒரு பொது கோயிலில் பக்தர்களை அனுமதிக்காமல் ஆண்டுக் கணக்கில் மூடி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. அரசு இயந்திரத்தை பயன்படுத்தி பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதற்காக தான் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளனர். கண்டதேவி கோயிலில் இதே போன்று திருவிழா நடைபெறாமல் இருந்தது. ஆனால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னரே, நமது முன்னோர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலய பிரவேசம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி காட்டினர். ஆனால், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தற்போதும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் பாகுபாடு காட்டுவது வேதனையளிக்கிறது. கோயிலில் கடவுள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை, மனிதர்கள் தான் பாகுபாடு பார்க்கின்றனர். மாவட்ட ஆட்சியரின் இந்த பதில் மனு கண்டனத்துக்குரியது. எனவே, சம்பந்தப்பட்ட கோயிலில் பக்தர்களை பாகுபாடின்றி அனுமதிப்பது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.