சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை, நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்குவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க சி.பி.ஐக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனிடையே சென்னை மதுரை உயர்நீதிமன்ற கிளையும், இந்த வழக்கை விசாரித்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மடப்புரம் அஜித்குமாரின் இடைக்கால இழப்பீடாக குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணை இன்று (22-07-25) மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் ஆகியோர் அமர்வு முன்பு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி ஒரு வார காலத்தில் தடய அறிவியல் தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டுவிட்டது. வழக்கின் சாட்சியான சக்தீஸ்வரனுக்கு ஆயுதம் ஏந்திய இரண்டு காவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில், ‘நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் கடந்த ஜூலை 12ஆம் தேதி சிபிஐ இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதியின் விசாரணை அறிக்கை மற்றும் ஆவணங்கள் ஜூலை 14ஆம் தேதி பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், ‘வழக்கு விசாரணை விரைவாக சென்று கொண்டிருக்கிறது. விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 20ஆம் தேதி சமர்க்க வேண்டும்’ எனத் தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில், ‘இந்த வழக்கின் சாட்சிகளான நவீன், அருண், பிரவீன் ஆகியோருக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதோடு, உச்ச நீதிமன்றம் சட்டவிரோத காவலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க என உத்தரவிட்டிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இவை அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘வழக்கின் சாட்சிகளான நவீன், அருண், சக்தீஸ்வரன், பிரவீன் ஆகியோருக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கூறிய மனுவை முதன்மை நீதித்துறை நடுவர் ஏழு நாட்களுக்குள் விசாரித்து பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும். சட்ட விரோத காவல் மரணத்தால் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை தமிழக அரசு ரூ.7.5 லட்ச ரூபாயை இழப்பீடாகவும், அரசு வேலை, இலவச வீட்டுமனை ஆகியவற்றையும் வழங்கியுள்ளது. ஆகவே தற்போது அஜித்தின் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ. 25 லட்சத்தை வழங்க வேண்டும். மனுதாரர்கள் தரப்பில் கூடுதல் இழப்பீடு தேவை எனில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்’ எனத் தெரிவித்து இந்த வழக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.