Madurai Atheenam, who did not appear, was summoned again Photograph: (Madurai Atheenam)
மதுரை ஆதீனம் திருச்சி நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தன்னை திட்டமிட்டு கொலை செய்யச் சிலர் எச்சரித்து இருப்பதாகவும், குல்லா அணிந்த நபர்கள் தன்னை கொலை செய்வதற்கு முற்பட்டு தன்னை தாக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதாவது சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டபோது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இந்த தகவலை தெரியப்படுத்தி இருந்தார்.
அதோடு அவரது ஓட்டுநரும் குல்லா அணிந்த நபர்கள் தங்களைத் தாக்கி கொலை செய்ய முற்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த பேச்சு குறித்து சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இந்த வழக்கானது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இருவேறு சமூகத்திற்கிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்படுதல், பொதுத் தூய்மைக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டு ஜூன் 30 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் மதுரை ஆதீனம் ஆஜராகாத நிலையில் ஜூலை 5 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சென்னை சைபர் கிரைம் மீண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.