சாதி பாகுபாடு தொடர்ந்தால் இந்து மத அடையாளங்கள் ஒரு நாள் அழிந்துவிடும் என மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 11ஆம் தேதி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், உயர் சாதி கிராமவாசிகளால் அவமானப்படுத்தப்பட்டதாகவும், ஏஐ உருவாக்கிய மீம் ஒன்றைப் பகிர்ந்ததற்காக மற்றொரு நபரின் கால்களைக் கழுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசம் டாமோ மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன் மற்றும் பிரதாப் மிட்டல் ஆகியோர் அமர்வு முன்பு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, “மாநிலத்தில் சாதி தொடர்பான வன்முறை மற்றும் பாகுபாடு நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நிகழ்வது அதிர்ச்சியளிக்கிறது. பொதுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் பழங்குடியின நபரின் தலையில் சிறுநீர் கழித்த அதே மாநிலம் இது. அவரை சமாதானப்படுத்த அப்போதைய முதல்வர் பாதிக்கப்பட்டவரின் கால்களைக் கழுவினார். சாதி அடையாளங்கள் அதிகரித்து வருகின்றன. முழு இந்து சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் ஒவ்வொரு சமூகமும் அடிக்கடி வெட்கமின்றி தனது சாதி அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.
தனிநபர்கள் மற்றும் குழுக்களின் சாதி அடையாளத்தை வலியுறுத்தும் போக்கு சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஒவ்வொரு சாதியும், தனது சாதி அடையாளத்தைப் பற்றி மிகவும் கூச்சலிட்டு மிகுந்த உணர்வுடன் உள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பெருமையை நிரூபிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவிடாமல் ஆக்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குறைந்த கல்வியறி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள். சமூக ஊடகங்களும் பொது விவாதங்களும், மத அடையாளத்திலிருந்து சாதி அடிப்படையிலான பிரிவுகளுக்கு மாறிவிட்டன.
பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள், ஒவ்வொருவரும் தங்கள் சுயாதீன அடையாளத்தை உறுதிப்படுத்துகிறார்கள். இந்த கட்டத்தில், சாதி பாகுபாடுகளைக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஒன்றரை நூற்றாண்டுக்குள் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளும் மக்கள் இல்லாமல் போய்விடுவார்கள், தங்களுக்குள் சண்டையிடுவார்கள். இந்து என்ற அடையாளம் ஒரு நாள் அழிந்துவிடும். அவசரமாகவும் உடனடியாகவும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சூழ்நிலைகள் வன்முறைக்கு வழிவகுக்கும். அதன் பிறகு காவல்துறை நடவடிக்கை பயனற்றதாகி, பொது ஒழுங்கு சீர்குலைந்துவிடும்” என்று கூறி வீடியோவில் காணப்படும் அனைவருக்கும் எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (NSA) பயன்படுத்துமாறு காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர்.