madhya pradesh BJP minister's controversial comment on affected Australian players
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இத்தொடர், நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 8 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் 26வது போட்டியானது மத்தியப் பிரதேசம், ஹோல்கர் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற இந்த போட்டியில், 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணியை ஆஸ்திரேலியா மகளிர் அணி தோற்கடித்தது.
இந்த போட்டிக்கு முன்னதாக, இந்தூரில் இரண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஐசிசி உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் இரண்டு பேர், ஒரு ஹோட்டலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், அவர்களை பின் தொடர்ந்து அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. இது சம்பவம் குறித்து உடனடியாக போலீசார் விசாரணை நடத்தி குற்றச் செயலில் ஈடுபட்ட அகீல் (29) என்ற நபரை அடையாளம் கண்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்காக இந்தியா வந்த ஆஸ்திரேலியா வீராங்கனைகளுக்கு ஒரு நபர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாலியல் தொல்லைக்கு ஆளான ஆஸ்திரேலியா வீராங்கனைகள் மீது தவறு இருக்கிறது என பா.ஜ.க அமைச்சர் ஒருவர் சர்ச்சையாக பேசியுள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மத்தியப் பிரதேச மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது, “நாங்கள் வெளியே செல்லும் போதெல்லாம், குறைந்தபட்சம் ஒரு உள்ளூர் நபரிடமாவது தெரிவிப்போம். கிரிக்கெட் வீரர்கள் மீது மிகுந்த மோகம் இருப்பதால், புறப்படுவதற்கு முன்பு எங்கள் பாதுகாப்பு அல்லது உள்ளூர் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இது எதிர்காலத்தில் வீரர்களுக்கு நினைவூட்டும் என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்தில் கால்பந்து போன்ற ஒரு விளையாட்டு தான் கிரிக்கெட். கால்பந்து வீரர்களின் உடைகள் கிழிக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
நாங்கள் ஒரு ஹோட்டலில் தங்கி காபி குடித்துக் கொண்டிருந்தோம். பல இளைஞர்க வந்தார்கள், யாரோ ஒரு பிரபல வீரரிடம் ஆட்டோகிராஃப் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் அவரை முத்தமிட்டார், அவரது உடைகள் கிழிந்தன. அவர் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர். சில நேரங்களில், வீரர்கள் தங்கள் பிரபலத்தை உணர மாட்டார்கள். வீரர்கள் மிகவும் பிரபலமானவர்கள், எனவே அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த சம்பவம் நடந்துள்ளது. இது அனைவருக்கும் ஒரு பாடம். இது நமக்கும் வீரர்களுக்கும் ஒரு பாடம்” என சர்ச்சையாகப் பேசினார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் குறை கூறுகிறார் என காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow Us