சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர்.
அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தினார். தொடர்ந்து கடந்த 08/07/2025 அன்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றிய நிலையில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு, 15 ஆம் தேதிக்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மாநில காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு இந்த வழக்கின் ஆவணங்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் சிபிஐ இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில் பிஎன்எஸ்-103 பிரிவில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது சிபிஐ.
பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்- 103)
(1) கொலை செய்பவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும்.
(2) இனம், சாதி அல்லது சமூகம், பாலினம், பிறந்த இடம், மொழி, தனிப்பட்ட நம்பிக்கை அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து கொலை செய்யும் போது, அத்தகைய குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும், மேலும் அபராதமும் விதிக்கப்படும்.