தென் மண்டல எல்.பி.ஜி. டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் இணைந்துள்ளனர். மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் இருந்து எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை டேங்கர் மூலம் வாடகை ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கி வருகின்றனர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் இந்த சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது 2025ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டுக்கான டேங்க் லாரிக்கான ஒப்பந்தத்தில் ஆயில் நிறுவனங்கள் பல்வேறு விதிமுறைகள் விதித்தது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக 3500 கேஸ் டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்த நிலையில் தற்போது 2800 கேஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கான கட்டணத் தொகைகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

Advertisment

இதனையடுத்து இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த வேலைநிறுத்த போராட்டம் சட்ட விரோதமானது எனவும், இதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் அனுபமா சமந்தராய் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “எல்பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக எல்.பி.ஜி. கேஸ் நிரப்பும் ஆலைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படும். 

பொதுமக்கள் சமையல் எரிவாயு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவும். எல்.பி.ஜி. கேஸ் என்பது அத்தியாவசியப் பொருள் ஆகும். அதனை விநியோகம் செய்யாமல் தடுப்பது அத்தியாவசியப் பொருள் சட்டத்தின்படி சட்ட விரோதமான செயல் ஆகும். எனவே சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்படி சமையல் கேஸ் டேங்கர் லாரிகளை இயக்க அதன் உரிமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment