Low pressure area approaching Chennai and Red alert due to incessant heavy rain
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், நேற்று (30.11.2025) இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறி இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் டிட்வா புயல் வழுவிழந்த நிலையிலும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது.
இதனிடையே, சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுயுள்ளதாகவும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 140 கி,மீ தொலைவிலும், கடலூருக்கு தென் கிழக்கே 160 கிம் தொலைவிலும் தாழ்வு மண்டலம் நிலவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (01-12-25) மாலை திடீரென ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருந்த நிலையில், இன்று மாலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 20 செ.மீக்கு மேல் மழையும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக சென்னைக்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 5 பேரிடர் மீட்பு குழுவினர் சென்னைக்கு விரைந்துள்ளனர். ஏற்கெனவே, சென்னை ரிப்பன் மாளிகையில் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
Follow Us