ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கெட்டிச்செவியூரில் மோகன்குமார் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த வாழைத் தோட்டத்திற்குக் காளான் பறிக்க அதே பகுதியைச் சேர்ந்த சிலர் சென்றுள்ளனர். அப்போது தோட்டத்திற்குள் பெண்ணின் தலைமுடி மட்டும் வெளியே தெரிந்துள்ளது. மேலும் அருகே ரத்தக்கறையுடன் கத்தி ஒன்றும் கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாகச் சிறுவலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தத் தோட்டத்தை ஆய்வு செய்து, தலைமுடி தெரிந்த இடத்தில் தோண்டிப் பார்த்துள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவரை கொன்று நிர்வாணமாகப் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் பெண்ணின் கழுத்துப் பகுதி அறுக்கப்பட்டு தாடைப் பகுதியில் பலத்த காயம் இருந்துள்ளது. பின்னர் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொல்லப்பட்ட பெண் யார்? எதற்காகக் கொல்லப்பட்டார்? யார் கொலை செய்தது? என்று பல்வேறு கோணங்களில் விசாரணைகளைத் தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் ஆப்பகூடல் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சோனியா என்பது தெரியவந்தது. மேலும் அவர் கணவரை இழந்து பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. உடனடியாக அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார் அவர் யார் யாரிடம் பேசினார் என்பதைக் கண்டறிந்தனர். அதில் உடல் புதைக்கப்பட்டிருந்த வாழைத் தோட்டத்தின் உரிமையாளர் 27 வயதான மோகன்குமாரிடம் சோனியா அடிக்கடி பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகன்குமாரை அழைத்து விசாரணை நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.
மோகன்குமாருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. ஆனால், குழந்தை இல்லாத காரணத்தால் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கார்மெண்ட்சில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அப்போதுதான் அங்கு ஏற்கெனவே வேலை பார்த்து வந்த சோனியாவுடன் மோகன்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னாளில் சோனியாவும், மோகன்குமாரும் இடையேயான பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது. அதன் காரணமாக இருவரும் அடிக்கடி வாழைத் தோட்டத்தில் சந்தித்துத் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்தச் சூழலில்தான் சோனியா தன்னை முறைப்படித் திருமணம் செய்துகொள்ளுமாறு மோகன்குமாரை வற்புறுத்தியுள்ளார். ஆனால், மோகன்குமாருக்கோ சோனியாவைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாததால், மறுப்புத் தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் சோனியா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், அவரைக் கொலை செய்துவிடலாம் என்று மோகன்குமார் திட்டம் தீட்டியிருக்கிறார்.
அதன்படி சம்பவத்தன்று சோனியாவை வாழைத் தோட்டத்திற்கு வரவழைத்த மோகன்குமார் அவருடன் தனிமையில் இருந்திருக்கிறார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துச் சோனியாவின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் அருகே கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையில் அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சோனியா சம்பவ இடத்திலேயே துடித்துத் துடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் உடலைத் தோட்டத்தில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு அவரது ஆடை மற்றும் செல்போன்களை அருகே உள்ள ஆற்றில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடித்தனர்.
தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெண்ணை, ஆண் நண்பரே கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
  
 Follow Us