மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தியின் மகன் முகில் வேந்தன் (25), கார் ஓட்டுநர். சிதம்பரம் அருகே உள்ள எண்ணா நகரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமாரின் மகள் ரோஷினி (20), சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், முகில் வேந்தனும் ரோஷினியும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதில், இருவரும் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ரோஷினி கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரோஷினி, முகில் வேந்தனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மாறு கேட்டுள்ளார். ஆனால், முகில் வேந்தன் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதுகுறித்து, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரோஷினி புகார் செய்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை(9.10.2025) இரவு, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து, மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலி, முகில் வேந்தனை விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ரோஷினிக்கு ஆதரவாக வந்த உறவினர்கள் திடீரென மகளிர் காவல் நிலையத்தில் புகுந்து, முகில் வேந்தனைச் சரமாரியாகத் தாக்கினர்.

Advertisment

அப்போது, அவர்களைத் தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலிக்கு கையில் பலத்த அடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மகளிர் காவல் நிலையத்தில் ரோஷினியின் ஆதரவாளர்களும், முகில் வேந்தனின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் ஆபாசமாகத் திட்டிக் கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, முகில் வேந்தனை உள்ளே வைத்து, போலீசார் மகளிர் காவல் நிலையத்தைப் பூட்டிவிட்டனர். இதன் பின்னர், இரு தரப்பினரையும் காவல் நிலையத்தை விட்டு போலீசார் வெளியேற்றினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எப்போதும் கூட்டம் கூட்டமாக வருவதும், பல்வேறு பஞ்சாயத்துக்கள் பேசி முடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரின் மெத்தனமே காரணம் என்றும் கூறப்படுகிறது.

Advertisment