Advertisment

வீட்டில் காதலன், விடுதியில் காதலி; சற்று நேரத்தில் முடிந்த காதல் - லாட்ஜில் நடந்த கொடூரம்!

Untitled-1

செங்குன்றம் அருகே எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ராபின். இவர் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான த்ரிஷா என்ற இளம்பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ராபினுக்கும், த்ரிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் விவகாரம் இரு வீட்டுப் பெற்றோர்களுக்குத் தெரியவந்திருக்கிறது. முதலில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பின்னர் த்ரிஷாவும், ராபினும் பேசி சம்மதம் பெற்றிருக்கின்றனர். அதன் காரணமாக இருவருக்கும் கூடிய விரைவில் திருமணமும் நடைபெறவிருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதற்கிடையே காதல் ஜோடி சென்னையில் பல பகுதிகளுக்கு ஒன்றாகச் சென்று தங்களின் காதலை வளர்த்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் 8 ஆம் தேதி காலை சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ராபினும், த்ரிஷாவும் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். பின்னர் அன்று இரவு இருவரும் அறையில் ஒன்றாகத் தங்கிய நிலையில், மறுநாள் காலை (9.9.2025) ராபின் விடுதியில் இருந்து வெளியே சென்றுவிட்டு சில பொருட்களை வாங்கி வந்திருக்கிறார். பின்னர் த்ரிஷாவிற்கும், ராபினுக்கும் அறையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தகராறு இருவருக்கும் இடையே பெரும் மோதலாக வெடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கோபமாக அறையை விட்டு வெளியேறிய ராபின், அறையை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.

பின்னர் த்ரிஷாவின் நெருங்கிய உறவினரைத் தொடர்புகொண்ட ராபின், “அவள் வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் விடுதி அறையில் இருக்கிறாள்; உங்களிடம் ஏதோ பேச வேண்டும் என்று கூறினாள்” என்று தகவல் கொடுத்திருக்கிறார். பின்னர் அந்த உறவினர், த்ரிஷாவின் செல்போனுக்கு தொடர்புகொண்டிருக்கிறார். பல முறை தொடர்புகொண்டும் த்ரிஷா போனை எடுக்காததால், சந்தேகமடைந்து தனியார் விடுதியின் அலுவலக எண்ணிற்குத் தொடர்புகொண்டு நடந்த விஷயத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அந்த விடுதி ஊழியர்கள் மற்றொரு சாவியைக் கொண்டு த்ரிஷாவின் அறையைத் திறந்துள்ளனர். அப்போது, அறையில் த்ரிஷா தூக்கில் தொங்கியபடி இருந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி காவல்துறையினர், த்ரிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விடுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ராபின் விடுதியின் அறையை வெளிப்பக்கமாகப் பூட்டிச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ராபினைப் பிடித்து விசாரிக்க ஆயத்தமாகினர். இந்த நிலையில் விடுதியில் இருந்து வெளியேறிய ராபின் செங்குன்றத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்தவர்களிடம் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாகத் தாழ்ப்பாள் போட்டிருக்கிறார்.

நீண்ட நேரமாகியும் ராபின் வெளியே வராததால், அவரது பெற்றோர் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ராபின் தூக்கில் சடலமாகத் தொங்கியுள்ளார். உடனடியாக தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

விடுதியில் காதலி தூக்கில் தொங்கிய நிலையில், அவர் இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

young girl Chennai lover police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe