கர்நாடகாவில் கடந்த  ஜூலை 15 ம் நாள் பிரபல ரவுடியான ஷீட்டர் சிவபிரகாஷ் என்ற பிக்லு ஷிவு மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் நான்கு நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் ஐந்தாவதாக பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisment

அதனால், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி பசவராஜ் கர்நாடகா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 19ஆம் தேதியன்று நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது சிஐடி சார்பில் அரசு வழக்கறிஞர் அசோக் நாயக் ஆஜராகி, இந்த கொலை வழக்கில் முதல் மற்றும் ஐந்தாவது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலுக்கான ஆதாரங்களை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாகவும், பசவராஜைக் கைது செய்து காவலில் வைத்து விசாரித்த பின்னரே இந்த வழக்கில் மேலும் முக்கியத் தொடர்புகள் வெளிவரும் என்று வாதிட்டார். 

Advertisment

அதனை தொடர்ந்து பசவராஜ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தேஷ் செளதா, எம்எல்ஏவுக்கு எதிரான இந்த வழக்கில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், சதி மற்றும் யூகங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும், சம்பவம் நடந்து ஐந்து மாதங்களாகியும், மனுதாரரின் தொடர்பை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதையும் புலனாய்வாளர்கள் கண்டறியவில்லை என்றும் வாதிட்டார். மேலும், முதலாவது குற்றம் சாட்டப்பட்ட ஜகா பிறந்தநாள் விழாவில் பசவராஜ் கலந்து கொண்டது மற்றும் கும்பமேளாவிற்குச் சென்றது போன்ற தொடர்பில்லாத சமூகப் பழக்க வழக்கங்களைக் கூறி, பசவராஜை செயற்கையாக இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பசுவராஜின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு பின்னர், பசுவராஜுக்கு எதிராக சிஐடி லுக் அவுட் நோட்டீஸை அனுப்பியுள்ளது. விசாரணைத் தீவிரமடைந்து வருவதால், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment