நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது முன்னாள் ராணுவத்தளபதி நரவனேவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சீன ஊடுருவல் விவகாரம் குறித்துப் பேசினார். இதற்கு அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் அமித்ஷா ஆகியோர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பாஜக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் இடையூறு செய்தனர். அதனை தொடர்ந்து அவை கூடிய போது, சீன ஊடுறுவல் தொடர்பாகவும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவையும் பல முறை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்காதது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் காகிதங்களைக் கிழித்து எரிந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் தமிழக எம்பி உட்பட எட்டு எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எட்டு எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று (06-02-26) காலை மக்களவை கூடியது. அப்போது ராகுல் காந்தியை பேசவிடாதது குறித்து எதிர்க்கட்சி எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது, “அவை சரியாக நடக்க நான் எப்போதும் பாடுபட்டுள்ளேன். இது அனைத்து உறுப்பினர்களின் கேள்வி நேரம். நீங்கள் அவையை ஒழுங்காக நடத்த விரும்பவில்லை. நீங்கள் ஒரு இடையூறை உருவாக்க விரும்புகிறீர்கள். இதுவரை அவையின் 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 140 கோடி குடிமக்களும் அவை செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விவாதம் இருக்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவையின் கண்ணியத்தை அழிக்கிறீர்கள். நாட்டு மக்கள் அவை செயல்படுவதைப் பார்க்க விரும்புகிறார்கள். அவர்கள் அதையே உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறார்கள்.
சுவரொட்டிகள் மற்றும் கோஷங்களுக்காக நீங்கள் இங்கு அனுப்பப்படவில்லை. விவாதத்திற்காக நீங்கள் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் அவையை நடத்த விரும்பவில்லை என்றால், நீங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இடையூறு ஏற்படுத்த விரும்பினால், நீங்கள் அவையின் கண்ணியத்தை அழிக்க விரும்பினால், நான் அவையை இப்படி நடத்த முடியாது. நீங்கள் வெளியேற விரும்புகிறீர்களா? விவாதிக்க விரும்புகிறீர்களா?” என்று வேதனையோடு தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/ombirla-2026-02-06-19-59-38.jpg)