நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (21-07-25) டெல்லி உள்ள நாடாளுமன்றத்தில் தொடங்கியது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் நடந்துள்ள நிலையில், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல்வேறு ஒத்திவைப்பு தீர்மானங்களை அளித்திருந்தனர். ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரம் நடத்தலாம் என உத்தரவிட்டார். இதன்படி, கேள்விகள் கேட்கப்பட்டு மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்களது இருக்கையில் இருந்து எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். ஏற்கெனவே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை மத்திய பா.ஜ.க அரசு ஏற்காததால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்க தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். அதன்படி, மாநிலங்களவையில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.