கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ நேற்று (09.01.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த மாநாட்டு நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்த மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்த அறிவிப்பை பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். 

Advertisment

இந்த மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரரும், தேமுதிக பொருளாளருமான எல்.சுதீஷ் பேசியதாவது, “இந்த மக்கள் உரிமை மாநாடு, இன்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல உலகமே திரும்பி பார்க்கிறது. தமிழ்நாட்டில் இருக்கிற கட்சி மட்டும் கிடையாது, டெல்லியில் இருக்கின்ற கட்சி அனைத்து கட்சியுடைய ஐபி ஐஎஸ் எல்லாமே இங்கேதான் இருக்கிறார்கள். 2011ல் விஜயகாந்த், 29 சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தமிழகத்தினுடைய எதிர்க்கட்சி தலைவராக சட்டசபைக்கு சென்றார். மீண்டும் அதே தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்று பிரேமலதா விஜயகாந்த் துணை முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. 2026இல் சட்டமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற பிரேமலதா விஜயகாந்த் எனும் நான் என்ற அந்த குரல் கண்டிப்பாக ஒலிக்க போகிறது.

Advertisment

இன்றைக்கு எல்லா கட்சிகளும் கூட்டணி பேரம் பேசுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆமாம், பேரம் தான் பேசுகிறோம். வேற எந்த கட்சியும் பேச முடியாது. பேசுவதற்கு ஒரே கட்சி தேமுதிக தான், வேற யாருமே கிடையாது. 10 வருடம் கழித்து மாநாடு நடத்துகிறோம். கன்னியாகுமரியில் இருந்து இந்த மாநாடு நடைபெறும் இடம் வரைக்கும் தொடர்ந்து கொடியை கட்டிய ஒரு இயக்கம், நமது தேமுதிக. நாம் என்ன ஆட்சியில் இருந்தோமா? கிட்டத்தட்ட 1000 கி.மீ கொடி கட்டுகிறோம் என்றால் எந்த அளவுக்கு தெம்பு இருக்கும்?. இந்த மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் நாம் ஏன் பேரம் பேசக்கூடாது? பேரம் சீட்டில் தான் பேசுகிறோம். நீங்கள் தருகிற 10 சீட்டுக்கோ, 15 சீட்டுக்கோ தேமுதிக கிடையாது. தேமுதிக எங்கே கூட்டணி போகிறதோ அந்த கட்சிதான் வெற்றி பெறும். அந்த கூட்டணி தான் வெற்றி பெறும் ஆட்சிக்கு வரும்” என்று ஆவேசமாகப் பேசினார்.