தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் ‘உள்ளம் தேடி; இல்லம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்க இருப்பதாக ஏற்கனவே பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். முன்னதாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது ஒரு மாநிலங்களவை எம்.பி இடம் தேமுதிகவுக்கு ஒதுக்கி இருப்பதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இறுதியில் அதிமுக தலைமை அதை மறுக்க, அதிருப்தியில் இருந்த பிரேமலதா அதன் காரணமாகவே கூட்டணி முடிவுகளை தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் ஒரே மேடையில் தே.மு.தி.க பொருளரும், பிரேமலாதவின் சகோதரருமான எல்.கே. சுதீஷ் பங்கேற்றுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜி.கே.மூப்பனாரின் நினைவு தினம் இன்று (30-08-25) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கும் வகிக்கும் அனைத்து தலைவர்களும் பங்கேற்றனர்.
குறிப்பாக பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தற்போது வரை எந்த கூட்டணியிலும் இல்லை என்று தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அக்கட்சியின் பொருளாளரும் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரருமான எல்.கே.சுதீஷ் பங்கேற்றிருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.