கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள தாழ்கெண்டிக்கல் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக, கரியாலூர் காவல் நிலையக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பெருமாள், தனது மெத்தை வீட்டில் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. சாராயம் காய்ச்சத் தேவைப்படும் மூலப் பொருளான 700 கிலோ வெல்லம் மற்றும் விஷ நெடி கொண்ட 4.5 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Advertisment

இதுதொடர்பாக, பெருமாள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தயாளமூர்த்தி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் வரும் வருமானம் அதிகமாக இருந்ததால், யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மெத்தை வீட்டில் சாராயம் காய்ச்சப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி நகரில் கள்ளச் சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன்பின், காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், கல்வராயன் மலையில் இதுவரை சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். அதற்குக் காரணம், காவல்துறையிலேயே உள்ள சில கறுப்பு ஆடுகள் கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு தொடர்ந்து தகவல் தந்து ஊக்குவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.