நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (15.08.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளாற்று கரையில் சுதந்திர தினத்தன்று கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பதாக பெண்ணாடம் காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் பெண்ணாடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 68 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த மது பாட்டில்களை பதுக்கிய பெண்ணாடம் சோழ நகரைச் சேர்ந்த கதிர்காமன் மகன் சேட்டு (வயது 45), அதே பகுதியைச் சேர்ந்த சக்தி (வயது 27) என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் சேட்டு என்பவர் மீது ஏற்கனவே மது பாட்டில் சம்பந்தமான வழக்கு உள்ளது. இவர் பாஜக கடலூர் மேற்கு மாவட்ட தலைவரும் திட்டக்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ழகன் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.