சென்னை அடுத்துள்ள வண்டலூர் பூங்காவில் சிங்கம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிங்கம் ஒன்று 25 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட லயன் சவாரி பகுதியில் திறந்து விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக உணவு அருந்தும் இடத்திற்கு சிங்கம் வரவில்லை. இதனால் பதற்றமடைந்த வண்டலூர் பூங்கா ஊழியர்கள் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மூன்றாவது நாளாக ட்ரோன் கேமரா மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக சிங்கத்தை தேடும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று மாலை ட்ரோன் கேமராவில் காணாமல் போன சிங்கம் சிக்கியது. தற்பொழுது அந்த பகுதியில் இடியுடன் கூடிய மழை பொழிந்து வருவதால் பலத்த இடி சத்தத்தைக் கேட்ட சிங்கம் புதர் ஒன்றில் இருந்து உணவு அருந்தும் இடத்திற்கு ஓடிவரும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனால் மாயமான சிங்கம் திரும்பி வந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.