ராமாயணத்தில் வரும் ராவணனின் தலை வெட்டப்படும் போதெல்லாம் மீண்டும் முளைப்பது போல இணையதளங்களில் அந்தரங்க வீடியோக்கள் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

இணையதளத்தில் பகிரப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் சார்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. 'திருமணத்திற்கு முன்னர் ஆண் நண்பருடன் இருந்த வீடியோக்களை இணையதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் பொழுது இந்தியாவில் உள்ள பல்வேறு இணையதளங்களை முடக்கியதைப் போல இந்த சட்டவிரோத இணையதளங்களையும் முடக்க வேண்டும்' என பெண் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, 'சைபர் க்ரைம் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் நேரடியாக தங்களுடைய வீடியோக்களை அகற்றுவது தொடர்பாக நிலையான வழிகாட்டுதலை மத்திய அரசு வழங்கி வருகிறது' என தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'ராமாயணத்தில் வரும் ராவணன் தலை ஒவ்வொரு முறை வெட்டப்படும் பொழுதும் மீண்டும் மீண்டும் முளைப்பது போல இணையதளத்தில் இதுபோன்ற அந்தரங்க வீடியோக்கள் பரவிக்கிடப்பது வேதனை தருகிறது' என தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியதோடு, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய ஏதுவாக வழக்கின் விசாரணையை  ஒத்தி வைத்துள்ளார்.