கர்நாடகாவில் ஓலா, உபேர், ராபிடோ போன்ற பைக் டாக்சிகளுக்கு கர்நாடக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடை விதித்தது. இந்த பைக் டாக்சிகளுக்கு, முறையான ஒழுங்கு முறை கட்டமைப்பு மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததாகக் கூறி, இது சட்டவிரோதமானது என்ற அரசின் முடிவைக் கர்நாடக உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து பைக் டாக்சிகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து ஓலா, உபேர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் மேல்முறையீடு செய்திருந்தன.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (23.01.2026) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தனர். அதன்படி, ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாள் தனி நீதிபதி அளித்த "பைக் டாக்சிகள் இயங்க விதித்த தடை" உத்தரவை ரத்து செய்து, பைக் டாக்சிகள் இயங்குவதற்கு அனுமதியளித்தது. மேலும், பைக் டாக்சி நிறுவனங்கள் தங்களது சேவைகளைத் தொடர்ந்து வழங்க, தற்போதைய சட்ட விதிகளின் கீழ் உரிமம் பெற்றிட கூடுதல் நிபந்தனைகளை விதிக்கவும் அரசிற்கு அனுமதியளித்துள்ளது.
மேலும், இருசக்கர வாகன உரிமையாளர்கள் மற்றும் பைக் டாக்சி நிறுவனங்கள் உரிமங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தற்போதுள்ள சட்ட விதிகளின்படி அரசு அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாகப் பரிசீலனை செய்யப்பட்டு, அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் அரசு ஆராயலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதே வேளையில், வாகனம் ஒரு மோட்டார் சைக்கிள் என்பதால் டாக்சி பதிவை மறுக்கக் கூடாது என்றும், மோட்டார் சைக்கிளைப் போக்குவரத்து வாகனமாகக் கருதி, அவற்றுக்கு ஒப்பந்த வாகனப் போக்குவரத்து அனுமதி வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow Us