திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வடக்கவுஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (31). இவர் திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் தங்கி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது தங்கை பிரியா, அவரது கணவர் கார்த்திகேயன் மற்றும் மகளுடன் திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்தது. இதையடுத்து, கார்த்திகேயன் தனது மகளை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்.
தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த கருப்பசாமி, "எதற்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தீர்கள்? தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியது தானே?" என்று கூறி கார்த்திகேயனைத் திட்டியதாகத் தெரிகிறது. அப்போது, சிறுமியைப் பார்க்க வந்த கருப்பசாமியின் அக்காள் கணவர் குலசிவேலு (51), "நாய்க்கடிக்கு அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும்," என்று தெரிவித்தார். இதனால், கருப்பசாமிக்கும் குலசிவேலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், கருப்பசாமி குலசிவேலுவைத் தாக்கினார். ஆத்திரமடைந்த குலசிவேலு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்பசாமியின் கழுத்தில் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் கருப்பசாமி அரசு மருத்துவமனை வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக, பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து, மயங்கி விழுந்த கருப்பசாமிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, குலசிவேலுவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.