நண்பனை கொலை செய்த வழக்கில், ஐந்து சக நண்பர்களுக்கு வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (21) என்பவரின் தங்கையை, அவரது நண்பரான விக்கி (24) கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், தனது நண்பர்களான கரிமுல்லா ஷெரிப் (22), விஷ்ணு (22), காஜா கவுஸ் மொய்தீன் (23), மற்றும் தொரப்பாடியைச் சேர்ந்த ராஜ்குமார் (20) ஆகியோருடன் சேர்ந்து, 2021-ஆம் ஆண்டு விக்கியை அழைத்துச் சென்று மது அருந்த வைத்து, திட்டமிட்டு கொலை செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி சாந்தி, குற்றவாளிகளான கரிமுல்லா ஷெரிப், விஷ்ணு, சுபாஷ், காஜா கவுஸ் மொய்தீன், மற்றும் ராஜ்குமார் ஆகிய ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், விஷ்ணுவுக்கு மட்டும் கூடுதலாக 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, ஐந்து பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.