சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கும் விழா மற்றும் குழந்தைகள் தின விழா தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “2 நாளைக்கு முன்பு செய்திகளில், தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 155 மாணவர்கள் யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என்று ஒவ்வொரு நிலையிலும் நான் முதல்வன் திட்டம் மூலமாகத் தமிழக அரசு ஊக்கத் தொகையை கொடுத்து கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல முறையில் அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் அத்தனைபேரும் இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் எல்லாம் ரீல்ஸ் பார்க்கின்றோம். பார்ப்பீர்கள். ஒன்றை மட்டும் செல்ல விரும்புகின்றேன். ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கை கிடையாது. அதில் முக்கால்வாசி பொய் என்பதால்தான், அதற்கு பேரே ரீல்ஸ். ரியலாக நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால், கல்வி தான் உங்களுக்கு என்றைக்குமே கை கொடுக்கும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கல்வியோடு சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்துங்கள். நீங்கள் கல்வியில் முன்னேறினால், உங்களுடைய குடும்பம் பொருளாதாரத்தில் நிச்சயம் முன்னேறும். உங்களுக்கே அந்த நம்பிக்கை வரும். உங்கள் குடும்பம் எல்லாம் முன்னேறும்போது, ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறும். அந்த முன்னேற்றத்தை உங்களுடைய கல்வியில் இருந்து தான் தொடங்க முடியும். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய மிதிவண்டிகள். அது உங்களுடைய சைக்கிள். உங்களுடைய சொத்து, நீங்கள்தான் அதற்கு ஓனர்ஸ் இனிமேல், அதை பாதுகாப்பாக வைத்து பத்திரமாக பராமரிக்க வேண்டும்.
இங்கே பல மாணவச் செல்வங்கள் வந்திருக்கின்றீர்கள். பல ஆசிரியர்கள் வந்திருக்கின்றீர்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் வந்திருக்கின்றார். அவரை வைத்துக் கொண்டு ஆசிரியர் பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து பள்ளிக்கூடங்களில் விளையாட்டு பீரியடை (PET period) கடன் வாங்கி மற்ற பீரியடை நடத்தாதீர்கள். முடிந்தால், உங்கள் பீரியடை கடன் கொடுத்து, மாணவர்களை அதிகமாக விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு ஊக்கமளியுங்கள். படிப்பு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு மாணவச் செல்வங்களுடைய உடல் ஆரோக்கியமும் மிக, மிக முக்கியம்” எனப் பேசினார்.
Follow Us