'தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக மாற்ற அப்துல் கலாம் வழியில் உழைப்போம்' என பாமகவின் அன்புமணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பாமகவின் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'இந்தியாவை வளர்ந்த நாடாகவும், தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாகவும் மாற்ற வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பத்தாம் நினைவுநாள் இன்று. மாபெரும் மனிதப் புனிதரை இழந்த இந்த நாளில் அவர் குடியரசுத் தலைவராகவும், விஞ்ஞானியாகவும் ஆற்றிய பணிகளை நினைவு கூர்கிறேன்; அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
இந்தியாவைவும், தமிழ்நாட்டையும் முன்னேற்றுவதற்கான செயல்திட்டம் அவரிடம் இருந்தது. அதை யாரால் நிறைவேற்ற முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மறைந்த மேதையின் நினைவு நாளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அவரது கனவை நனவாக்குவதற்கு கடுமையாக உழைக்க உறுதியேற்றுக் கொள்வோம்' என தெரிவித்துள்ளார்.