'Let this Raghupati give me a promise, I will answer' - Tamilisai Aavesam Photograph: (bjp)
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் பனையூர் இல்லத்திற்கு சென்றுள்ளார். நாளை அவர் தவெக கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செங்கோட்டையன் தவெகவில் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''நான் உட்கட்சியில் உள்ள கருத்துக்களுக்கெல்லாம் மாற்றுக் கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் நான் நேற்றே ஒன்று சொன்னேன் செங்கோட்டையன் அவர்கள் நெடுநாள் அரசியலில் இருப்பவர். நாங்கள் இன்று செங்கோட்டை இருக்கிற டெல்லியை பிடித்திருக்கிறோம். நாளை ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதற்கு நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம். வெற்றியும் அடைவோம். ஆகவே இன்று எங்களது நோக்கம் செங்கோட்டையிலிருந்து ஜார்ஜ் கோட்டைக்கு வருவதே தவிர அண்ணன் செங்கோட்டையன் முடிவெடுக்க அவருக்கு உரிமை இருக்கிறது. அதனால் அவரின் அரசியல் நகர்வு பற்றி நாங்கள் கருத்து சொல்ல எங்களுக்கு தகுதி இல்லை. அதற்கு நாங்கள் விரும்பவும் இல்லை என்பது எனது கருத்து'' என்றார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை, ''அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் ஏன் அதை நிறுத்தினார்கள் என்றால் தேசத்துக்கு எதிராகப் பேசினால் தேசவிரோத சட்டம் பாயும் எனச் சொன்னதால் அதை நிறுத்தினார்கள். ஆனால் ஏதோ சீனாவுக்கு உதவி செய்யும் பொழுது திமுக கட்சிதான் அதற்கு உதவி செய்ததாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகிறார். திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்கள் நடத்துகின்ற பள்ளிகளுக்கு போய் பாருங்க இந்தி சொல்லி கொடுக்குறாங்களா இல்லையா? என்று சொல்லச் சொல்லுங்க. இதே ரகுபதி அவர்கள் அங்கு இந்தி சொல்லி கொடுக்கவில்லை என்று உறுதி சொல்லட்டும். அதற்கு நான் அவருக்கு பதில் சொல்றேன். யார் இந்தியை தூக்கிப் பிடிக்கிறார்கள்? இன்னைக்கு யாரும் இந்தியை திணிக்கவில்லை. இவர்கள் சும்மா பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னைக்கு அவர்களுக்கு நல்லா தெரிஞ்சிருச்சு 2026ல் வீட்டுக்கு போகப் போகிறோம் என்று, அதனால் இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.
இதே ரகுபதியிடம் கேட்கிறேன் நீங்க 'பீகார் மக்கள் டாய்லெட் கழுவுவதற்கு தான் லாயக்கு' என பேசுனீங்களா இல்லையா? 'அறிவே இல்லாதவங்க' எனப் பேசினீங்களா இல்லையா? உங்க கட்சியை சேர்ந்தவர்கள் பேசினார்களா இல்லையா? கல்வியை மத்திய பட்டியலுக்கு கொண்டு சென்ற கட்சியுடன் தானே இப்போதும் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் இன்னைக்கு நீங்கள் சொல்லும் பொய்களை எல்லாம் இனிமேல் மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இனிமேல் மக்கள் தெளிவாகி விட்டார்கள். 2026 எங்களுக்கானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
Follow Us