பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எலுமிச்சை பழம் விலை ஒரு கிலோ விலை ரூ.5 க்கும், ரூ.7 க்கும், ரூ.10 க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால் எலுமிச்சை விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, நகரம் சேந்தன்குடி, செரியலூர், பனங்குளம், குளமங்கலம், பெரியாளூர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு, கோட்டைக்காடு, ஆலங்காடு என 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை, பலா தோப்புகளில் ஊடுபயிராகவும் தனி தோப்புகளாகவும் எலுமிச்சை மரங்கள் வளர்க்கப்பட்டு தினசரி 10 டன் வரை எலுமிச்சை பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்பகுதியில் உற்பத்தியாகும் கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு உட்பட பல ஊர்களிலும் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் எலுமிச்சை பழங்கள் தரமானதாக இருப்பதால் மதுரை, கோவை, சென்னை, தஞ்சை, உள்பட பல மாவட்டங்களுக்கும் கேரளாவில் பல பெருநகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கீரமங்கலம் பகுதி எலுமிச்சை பழங்களை வெளியூர்களில் கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150 வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தற்போது, கடந்த சில வாரங்களாக படிப்படியாக விலை குறைந்து கேரளா உள்பட பல மேற்கு தொடர்ச்சிப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் குளிர்பானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் எலுமிச்சை பழம் விற்பனை படிப்படியாக குறைந்து ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10 க்கு கீழ் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

Advertisment

இந்த விலை இறக்கத்தால் மரங்களில் இருந்து பழங்கள் சேகரிக்கும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கக் கூட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கீரமங்கலம் கமிசன் கடைகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை எலுமிச்சை பழங்கள் வரத்து உள்ளது. விலை குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்தும் கூட வெளியூர் சந்தைகளில் நட்டத்திற்கே விற்பனை செய்து வருவதாக வியாபாரிகளும் கூறுகின்றனர்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நிரந்தரமான விலை கிடைக்காததால் தினசரி இறக்கத்தால் நட்டத்துடன் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.