தொடர் பாலியல் வன்கொடுமை; அடுத்தடுத்து மாணவியை நாசம் செய்த கல்லூரி விரிவுரையாளர்கள்!

103

கர்நாடக மாநிலம், மங்களூரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில்,  இயற்பியல் விரிவுரையாளராக நரேந்திரா என்பவரும், உயிரியல் விரிவுரையாளராக சந்தீப் என்பவரும் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவருக்கும் அனூப் என்ற நபர் நண்பராக இருந்துள்ளார்.

இந்த நிலையில், விரிவுரையாளர் நரேந்திரா, கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரிடம் பாடங்கள் தொடர்பான குறிப்புகளைத் தருவதாகக் கூறி அவரது செல்போன் எண்ணைப் பெற்றுள்ளார். அதன்பிறகு, அந்த மாணவிக்குத் தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பி நட்பாகப் பழகி வந்துள்ளார். மதிப்பெண்களில் கை வைத்துவிடுவார் என்று பயந்து, அந்த மாணவியும், விரிவுரையாளரின் மெசேஜ்க்கு எல்லாம் பதிலளித்து வந்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, விரிவுரையாளர் நரேந்திரா, மாணவியை தனது நண்பர் அனூப்பின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நரேந்திரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், இதனை யாரிடமாவது கூறினால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன மாணவி, நடந்த கொடூரம் குறித்து வெளியே கூறாமல் மௌனமாக இருந்துள்ளார்.

இதற்கிடையே, இந்தச் சம்பவத்தைப் பற்றி அறிந்த மற்றொரு விரிவுரையாளர் சந்தீப், பாதிக்கப்பட்ட மாணவியை தனிமையில் அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுப்பு தெரிவிக்கவே, "நரேந்திராவுடன் நீ  தனிமையில் இருந்த வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உன்னையும், உன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்திவிடுவேன். அப்படி செய்யாமலிருக்க வேண்டுமென்றால், எனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார். வேறு வழியின்றி சந்தீப்பின் ஆசைக்கு இணங்கிய அந்த மாணவியை, அனூப்பின் அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த மாணவி இதையும் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவியைச் சந்தித்த அனூப், "எனது அறையில் சிசிடிவி கேமரா இருக்கிறது. அதில், நரேந்திரா மற்றும் சந்தீப் ஆகியோருடன் நீ எனது அறைக்குள் நுழைந்த காட்சிகள் பதிவாகியுள்ளன" என்று கூறி, அவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பல சந்தர்ப்பங்களில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால், மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தைரியத்தை வளர்த்துக்கொண்டு, நடந்த கொடூரங்கள் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மராத்திஹள்ளி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மாணவியை வன்கொடுமை செய்த இரு விரிவுரையாளர்கள் மற்றும் அவர்களது நண்பர் அனூப் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவிக்கு பாடம் கற்பிக்க வேண்டிய விரிவுரையாளர்களே வன்கொடுமை செய்த நிலையில், அதனைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களது நண்பரும் மாணவியை வன்கொடுமை செய்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

college girl mangalore Professor
இதையும் படியுங்கள்
Subscribe