நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலுக்கு அருகே உள்ள பகுதியில் கோவிலின் செயல் அலுவலகத்தில் வைத்துக் குற்றப்பிரிவு போலீசார் அஜித்குமாரை பைப்புகளால் தாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த பகுதியில் பைப்புகள் உடைந்து சிதறிக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/01/a4249-2025-07-01-10-41-34.jpg)
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை காவலர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டதோடு, கண்ணன், ஆனந்த், பிரபு, ராமச்சந்திரன், சங்கர மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இறந்த இளைஞர் அஜித்தின் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரின் குடும்பமும் திருப்புவனம் காவல்நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'தனிப்பட்ட வேலைக்கா எங்களுடைய கணவர்கள், குடும்பத்தார்கள் வேலை பார்த்தார்கள்? அவர்களை நீங்கள் விட்டுவிட்டீர்களே. உங்களுடன் ஒருவராக தானே உங்களுடன் வேலை பார்த்தார்கள். ஏன் காலர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களுக்காக வரவில்லை. எங்கள் குடும்பத்தை இப்படி ரோட்டில் விட்டு விட்டீர்களே'' என தங்களுடைய குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.