'Leave Iran immediately' - Indian Foreign Ministry warns Photograph: (india)
ஈரான் நாட்டின் ரியால் நாணயத்தின் மதிப்பு பெருமளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அத்தியாவசிய பொருட்களான இறைச்சி, அரிசி போன்ற பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் சுமார் 40 சதவீதமாக மாறி இருப்பதால், மக்களின் அன்றாட வாழ்க்கை செலவுக்கான பணத்தின் மதிப்பும் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் அந்நாட்டு அரசு, மக்களுக்கு வழங்கும் முக்கியமான மானிய எரிபொருள் விலையை உயர்த்தியது.
Advertisment
மேலும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் விலையை மறுபரிசீலனை செய்யும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதோடு, மருந்து மற்றும் கோதுமையைத் தவிர பிற பொருட்களுக்கு டாலர்-ரியால் மாற்று விகித சலுகையும் நீக்கப்பட்டது. இதன் விளைவாக, உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து, சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையிலான அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisment
டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்த போராட்டங்கள், நாட்டின் 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன. மேலும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பது போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் இறங்கியுள்ளனர். மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையும், ராணுவமும் களத்தில் இறங்கி பலரை கைது செய்துள்ளது. கடந்த சில நாட்களில் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கடந்த வியாழக்கிழமை இரவு முழுவதும், அந்நாட்டின் தெஹ்ரான் சாலைகள் போராட்டாக்காரர்களால் நிரம்பி வழிந்தது. மக்கள் எழுச்சிக்கும், போராட்டத்திற்கும் அடிப்படையாக பொருளாதார நெருக்கடி அமைந்துள்ளது.
இந்நிலையில் ஈரானை விட்டு அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. நாட்டை விட்டு வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், வசிப்பிடங்களில் போதுமான அளவு உணவு, தண்ணீர், மருந்துகள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானில் இணைய சேவை தடைபட்டுள்ளதால் வெளியேற நினைப்பவர்கள் இங்குள்ள தங்களது குடும்ப உறுப்பினர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
Follow Us